கோவை : இந்திய பெண்களின் கல்விக்கு உதவும் திட்டத்துக்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வசூலித்துக்கொடுத்துள்ளார், அமெரிக்க மாணவி ஒருவர்."சேவ் அவர் டாட்டர்ஸ் இந்தியா' அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சம்பத்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் பிரசாத் கூறியதாவது:ஏழை மற்றும் காப்பகத்தில் வாழும் பெண் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பெற்று தருவதன் மூலம் அவர்களின் வாழ்வை மேம்படுத்த "சேவ் அவர் டாட்டர்ஸ் இந்தியா' அறக்கட்டளை துவக்கப் பட்டுள்ளது.
கடந்த 2009ல் கோவை மற்றும் உடுமலை பகுதிகளில் முதன் முதலாக இந்த திட்டம் துவக்கப்பட்டது. இப்போது இந்த திட்டத்தை பிற பகுதிகளுக்கும் விரிவு படுத்தி வருகிறோம்.சமுதாயத்தில் பெண் சிசுக் கொலையை தடுக்கவும், பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சரியாக கிடைக்க வழிவகை செய்வதுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். இந்த திட்டத்துக்கு, பணமும், நல்லகுணமும் படைத்த சிலர், ரோட்டரி கிளப் மூலமாக காப்பகம் மற்றும் ஏழைப்பெண் குழந்தைகளில் ஒருவர் வீதம் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற உதவும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் நபர், அக்குழந்தையின் பள்ளி, கல்லூரிப் படிப்பு முடித்து வேலை வாய்ப்பு பெற்று இச்சமுதாயத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழும் காலம் வரும் வரை அன்புடன் கூடிய உதவித்தொகையை தத்தெடுப்பவர்கள் வழங்க வேண்டும். இதுவரை இத்திட்டத்தில் 40 பெண்கள் பயன் பெற்றுள்ளனர்.
மக்கள் தொகையில் பெண்களின் சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. கருவிலேயே பெண் குழந்தைகள் அழிப்பு, சிசுக்கொலை, பெண் குழந்தையை வீதியில் விட்டுச் செல்லுதல், கடத்தல், ஊட்டச்சத்து குறைவு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுதல் என இதற்கு பல காரணங்கள் உள்ளன. மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பள்ளி மாணவி, தன்னுடைய நண்பர்களிடம் இத்திட்டம் குறித்து விளக்கி, இதுவரை 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தை வசூலித்துள்ளார். இத்திட்டம் மூலமாக, செவிலியர் படிப்பு, ஆசிரியர் பயிற்சி, பி.எஸ்.சி., பயோ-டெக்னாலஜி, பி.ஏ., பொருளாதாரம், பி.எஸ்.இ., உணவு மற்றும் ஊட்டச்சத்து, பி.காம்., உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 10 பெண்கள் கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தாண்டில் 25க்கும் மேற்பட்டோர் கல்வி பயில்கின்றனர். உடுமலையை அடுத்த கீரனூரில் 10 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டதை செயல்படுத்துவதன் மூலம் பெண் சிசுக்கொலை குறையும். பசிக்கொடுமை அகலும்; ஆரோக்கிய வாழ்வு அமையும், மனித உரிமைகள் காப்பாற்றப்படும்; ஏழ்மை அகலும், சமுதாயத்தில் அமைதி ஏற்படும்.இவ்வாறு சம்பத்குமார் மற்றும் மோகன் பிரசாத் தெரிவித்தனர்.--Dinamalar
No comments:
Post a Comment