Saturday, July 31, 2010

கோவை செம்மொழிப் பூங்கா பணி 18 மாதங்களில் முடியும்:மேலாண் இயக்குனர் தகவல்

கோவையில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி 18 மாதங்களில் முடியும்,'' என, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவன மேலாண் இயக்குனர் பனீந்திர ரெட்டி தெரிவித்தார்.
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நினைவாக, கோவை மத்திய சிறை அமைந்துள்ள இடத்தில் சர்வதேச தரத்திலான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். செம்மொழி மாநாட்டிலும் இது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.இந்த பூங்கா அமைப்பது தொடர்பாக, அரசால் ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு, முதல் கட்டப் பூங்கா அமைப்பதற்காக சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த பூங்கா அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை பெறப்பட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த"ராஜேந்திரன் அசோசியேட்ஸ்' இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இது தொடர்பான ஒருங்கிணைப்புக்கூட்டம், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி நிறுவன மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பனீந்திரரெட்டி தலைமையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், அசோசியேட்ஸ் சார்பில் ரூப்மதி ஆனந்த் பங்கேற்று, செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை "பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலமாக விளக்கினார். பூங்காவிற்குள் அமையவுள்ள பகுதிகள், தாவர வகைகள், தண்ணீர்த் தேவை உள்ளிட்ட பல விஷயங்களையும் அவர் விளக்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் பனீந்திரரெட்டி கூறியதாவது:செம்மொழிப் பூங்கா அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறை அமைந்துள்ள 165 ஏக்கர் பரப்பில், செம்மொழிப் பூங்கா அமைப்பது தொடர்பான முழுமைத் திட்டத்தை (மாஸ்டர் பிளான்) தயாரிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.இதைத் தயாரிக்கவுள்ள நிறுவனத்துக்கு, பிரதான வாயில், மல்டி லெவல் கார் பார்க்கிங், மாநாட்டுக்கூடம் ஆகியவற்றை எங்கே அமைப்பது, தண்ணீர்த் தேவையை எப்படி நிறைவேற்றுவது என்று "கன்சல்டன்ஸி' நிறுவனத்துக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அதுபற்றியும் இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது.
ஒரு நாளுக்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுமென கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் பற்றியும் இருக்கும் என்றும் முடிவு செய்ய வேண்டியுள்ளது. முதல் கட்டமாக, காலியாகவுள்ள 45 ஏக்கர் பரப்பில் பூங்காவை அமைப்பதற்காக நில அளவை செய்யப்பட்டுள்ளது.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரை ஏற்கப்பட்ட பின், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இந்த பணி, இன்னும் 20 நாட்களில் முடியும். அதன்பின் "டெண்டர்' உள்ளிட்ட பணிகள் நடக்கும். முதற்கட்ட பூங்கா அமைக்கும் பணி துவங்கி 18 மாதங்களில் முடிவடையும்.அடுத்த கட்டமாக, சிறை வளாகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான இடம் தேர்வு செய்து, கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். இவ்வாறு, பனீந்திரரெட்டி தெரிவித்தார்.-Dinamalar

No comments:

Post a Comment