கோவை "டைடல் பார்க்' விரைவில் திறக்கப்படவுள்ளதால், அவிநாசி சாலையில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மக்களிடம் நீண்ட காலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த கோவை "டைடல் பார்க்' கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்ட் 2ல் பூங்கா திறக்கப்படவுள்ளது. இப்போதே 35க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் பங்கேற்க முன் வந்துள்ளதால், ஓரிரு மாதங்களில் "டைடல் பார்க்' நிறைந்து விடும்.இந்த பூங்கா மூலமாக ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி நடக்கும் என்றும், நேரடியாக 12 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக சில ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்குமென்றும் கோவை "டைடல் பார்க்' நிர்வாக இயக் குனர் சண்முகசுந்தரம் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.
எப்படியும் அடுத்த ஆண்டு துவக்கத்திற்குள், கோவை "டைடல் பார்க்' முழு வீச்சில் இயங்க ஆரம்பித்து விடும். பல ஆயிரம் பேருக்கு, கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று கூறப்படுவதால், கொங்கு மண்டல மக்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த பூங்காவுக்குத் தேவைப்படும் ஆங்கிலம் அறிந்த, தொழில்நுட்பம் தெரிந்த மனித வளம், மாநிலத்தின் மற்ற பகுதிகளை விட கோவையில் அதிகம். வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து அதிகமான நபர்களை இங்கு வரவழைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.இருப்பினும், "டைடல் பார்க்'கில் அலுவலகம் அமைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் பெரும்பாலும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களே நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பணியாற்றுவோரும் இங்கு மாறும் வாய்ப்புண்டு. கோவை நகருக்கு புதிதாக குடியேறவுள்ள பல ஆயிரம் பேருக்கு குடியிருப்பு தேவை என்பதால், இவற்றுக்கான "கிராக்கி'யும் அதிகரிக்கும். ஏற்கனவே, இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காவை எதிர்பார்த்தே, கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலைகளில் ஏராளமான அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிறு தொழில் முனைவோர், தகவல் தொழில் நுட்பத்துறையினர் ஆகியோரைக் குறி வைத்தே, இந்த குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றாலும், இத்தனை பேரும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பெரும் மிரட்டலாகவுள்ளது. இந்த "டைடல் பார்க்'கில் பணிக்கு வரும் தகவல் தொடர்புத்துறையினரில் பல ஆயிரம் பேர், கார் இல்லாமல் இருக்கப்போவதில்லை. இத்தனை கார்களும் "டைடல் பார்க்' நோக்கி வரும்போது அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் கற்பனையிலேயே பயமுறுத்துகிறது. சென்னை தரமணியில் தினமும் ஏற்படும் நெரிசல், இங்கும் வந்து விடுமோ என்ற அச்சம் பலருக்கும் வந்துள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு அல்லது குறைப்பதற்கான தொலை நோக்கு நடவடிக்கைகளில் அரசு இப்போதே இறங்க வேண்டும்.
இந்த பூங்காவுக்கு பல்வேறு வழிகளிலும் அணுகுசாலைகளை ஏற்படுத்த வேண்டும்.விமான நிலையத்திலிருந்து இப்போது வரும் வாகனங்கள், வலது புறத்தில் ரோட்டைக் கடந்து, ஐ.டி.பூங்கா சாலைக் குச் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல, திருச்சி சாலையிலிருந்து காமராசர் சாலை வழியாக வரும் வாகனங்கள், "டைடல் பார்க்' செல்லுவதிலும் சிரமம் உள்ளது. இந்த சிரமத்தைத் தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 76 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடும் அனுப்பியுள்ளது. விமான நிலையம் மற்றும் காமராசர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள், அவிநாசி சாலையை சுரங்கப்பாதையில் கடக்க திட்டமிடப்பட்டுள்ளது.விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள், ஹோப்காலேஜ் பாலத்துக்கு முன்பாகவுள்ள காலியிடத்தில் திரும்பும் வகையில் "ரவுண்டானா' அமைத்து, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக ஐ.டி.பார்க் சாலைக்கு அனுப்புவதும், இதற்கு இணையாக காமராசர் சாலையிலிருந்தும் சுரங்கப்பாதை அமைப்பதுமே இத்திட்டம்.
இந்த திட்டத்துக்கு அரசின் ஒப்புதல் எப்போது கிடைக்கும், எப்போது பணிகள் துவங்கும் என்பது தெரியவில்லை. இதில், சாலைப் பணிகளை விட, நிலம் கையகப்படுத்த மட்டுமே 50 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. நான்கு ஏக்கர் நிலம் இதற்குத் தேவை என்று நெடுஞ்சாலைத்துறை மதிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த சுரங்கப்பாதை அமைக்காவிட்டால், அவிநாசி சாலை மற்றும் ஹோப்காலேஜ் பாலம் ஆறு வழிப்பாதையானதுக்கு பயன் இல்லை. கோவையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, 370 கோடி ரூபாய் மதிப்பில் "டைடல் பார்க்' அமைத்த முதல்வர் கருணாநிதி, இதற் கும் நிதி ஒதுக்குவார் என்பதே கோவை மக்களின் நம்பிக்கை.-DINAMALAR
No comments:
Post a Comment