கோவையில் பருவம் தவறாமல் மழை பொழியச்செய்யவும், நீராதாரங்களை பாதுகாப்பதற்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலுள்ள தொழிலதிபர்களால் துவங்கப்பட்ட சிறுதுளி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் இயற்கையை மையப்படுத்தி நிகழ்ச்சிகளை கோவையில் நடத்துகிறது. இந்த ஆண்டு பிரமாண்ட நிகழ்ச்சியை இரண்டு நாட்களுக்கு கோவையில் நடத்த திட்டமிட் டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கோவையில் வான் மழை பொய்த்தது; நிலத்தடி நீர் வறண்டது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய நிலங்கள் பாழ்பட்டன. அப்போது மக்கள் கொடுமையான துயரத்தை அடைந்தனர். கோவையின் நீராதாரமான சிறுவாணி அணையில் இருந்து வரும் குடிநீரை நகர மக்களுக்கு எட்டு நாட்களுக்கொருமுறை விநியோகிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. கோவை நகரமே கொடுமையான தண்ணீர் பஞ்சத்தால் வாடியது.இது போன்ற நிலை எப்பொதும் வரமால் இருக்கவும். கோவை வாழ் மக்கள், குடிநீருக்காக தவிக்காமல் இருக்கவும் சிறுதுளி அமைப்பு, கிருஷ்ணாம்பதி குளத்தை தூர்வாரி அகலப்படுத்தியது. அதன் பின்பு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையோடு இணைந்து தோளோடு தோள் சேர்ந்து நீராதாரங்களை தூர்வாரி ஒழுங்குபடுத்தியது.
குளத்திற்கு தண்ணீரை கொண்டு வரும் ஆற்றுவழிப்பாதைகள் தூர்வாரப்பட்டு, கரைகளை செப்பனிட்டனர். கோவையை சுற்றியுள்ள குளங்கள் தூர்வாரி வானத்து நீரை சேகரம் செய்து, கோவையில் நிலத்தடி நீரை உயர்த்தியது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செய்த பணிகளால் கோவையில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிறுதுளி அமைப்பு செய்த பணியால் கோவையில் ஏழு குளங்கள் தூர்வாரப்பட்டு 22 ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு குளங்களை சீரமைத்து 808 ஏக்கர் பரப்பளவில் 230 கன அடி அளவிற்கு தண்ணீரை சேகரம் செய்ய வழிவகை செய்தது. கோவையிலுள்ள கிருஷ்ணம்பதி, நரசம்பதி, செல்வம்பதி, குமாரசாமி (முத்தண்ணன்) செல்வசிந்தாமணி, குறிச்சி, உக்கடம் பெரியகுளம் ஆகியவற்றில் தற்போதும் வற்றாமல் தண்ணீர் ததும்பி நிற்கிறது. மேற்சொன்ன குளங்கள் அனைத்தும் தூர்வாரி, செப்பனிட்டு ஆழப்படுத்தி, கரைகள் அமைத்து பாதுகாக்கப்பட்டன. கோவை நகரிலுள்ள சாலைகளில் மழைக்காலங்களில் வீணாக வழிந்தோடும் மழைநீரை 150 இடங்களில், 250 முதல் 350 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மழைநீர் வடிகாலும் அதற்கென்று பிரதானமாக தொட்டியையும் அமைத்து மழைநீர் சேகரம் செய்யப்படுகிறது. இதனால் கோவையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதோடு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையோடு இணைந்து நொய்யல் ஆற்றின் ஆரம்பமான சோலைப்படுகை முதல் கோவை ஆத்துப்பாலம் வரையில் ஆற்றின் இரு பகுதிகளிலும் 39 கி.மீ., தூரத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்து எல்லையிலுள்ள ஆற்றின் கரைகளை பலப்படுத்தியுள்ளது.
சிறுவாணி அணைக்கு செல்லும் பாதையிலுள்ள சித்திரைச்சாவடி அணைக்கட்டை 300மீ நீளத்திற்கும் 100 மீ அகலத்திற்கும் இரண்டு மீட்டர் ஆழத்திற்கும் தூர்வாரி கரைகளை அமைத்தது. இதனால் அப்பகுதியிலுள்ள 5 ஆயிரம் விவசாயிகளும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களுக்கு பலன் கிடைத்துள்ளது. இப்படி பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வரும் சிறுதுளி அமைப்பு கோவையில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கையான, பழமையான, புராதனமான நிகழ்வுகளை நமக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வர உள்ளது. இன்னும் வரும்... -- DINMALAR
No comments:
Post a Comment