Tuesday, July 20, 2010

விமானப்படை தளம் விரிவாக்கம் நிலம் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு

சூலூர் விமானப்படைத் தள விரிவாக்கப் பணிக்காக காடாம்பாடி, காங்கயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு, விவசாயிகள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சூலூர், காங்கயம்பாளையத்தில் விமானப்படை தளம் செயல்பட்டு வருகிறது. விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. படையினருக்கான குடியிருப்புகளும் உள்ளன. இதன் விரிவாக்க பணிக்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தலாம் என்ற தகவல் பரவி வருகிறது. இதையடுத்து, காங்கயம்பாளையம், காடாம்பாடி, கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, பருவாய் உள்ளிட்ட ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்தப்படலாம்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு, சூலூர் தாலுகா அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள் ளது. கையகப்படுத்தும் நிலப்பகுதிகள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அலுவலக விளம்பர பலகையில் ஒட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடாக கலங்கல் ஊராட்சியில் ஏக்கருக்கு 2. 50 லட்சம் ரூபாயும், மற்ற ஊராட்சிகளில் 2 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து காங்கயம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: விமானப்படை தள விரிவாக்கப் பணிக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது. விவசாயிகளும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்திற்கு குறைந்த அளவே இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. அத்தொகையும் முழுமையாகவும், முறையாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பான வழக்குகள்,நிலுவையில் உள்ளன. இந்நிலையில், மீண்டும் கையகப்படுத்த முயிற்சிக்க கூடாது. இவ்வாறு, காங்கயம்பாளையம் விவசாயிகள் தெரிவித்தனர்.-Dinamalar

No comments:

Post a Comment