கோவை ஹோப்காலேஜ் பாலம் அருகே பல அடுக்கு மேம்பாலம் கட்டும் திட்டம் உள்ளது,'' என்று அமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை "டைடல் பார்க்' அமைக்கும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஆக.2 அன்று திறப்பு விழா நடக்கிறது. துணை முதல்வர் ஸ்டாலின், இதனைத் திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், "டைடல் பார்க்' பணிகளை தமிழக அமைச்சர் பழனிச்சாமி நேற்று திடீர் ஆய்வு செய்தார்.ஆய்வுக்குப் பின், அமைச்சர் பழனிச்சாமி கூறியதாவது: சென்னைக்கு அடுத்ததாக இரண்டாம் நிலை நகரங்களான கோவை, மதுரை மற்றும் திருச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்படுமென்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் முதல் முறையாக, கோவையில் "டைடல் பார்க்' கட்டி முடிக்கப் பட்டுள்ளது.மொத்தம் 380 கோடி ரூபாய் மதிப்பில், 17 லட்சம் சதுர அடியில் சென்னையை விட பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சிவில் பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளன. அலுவலகங்களுக்குள்ளான கட்டுமான வசதிகளை அந்தந்த நிறுவனங்களே செய்து கொள்ளும்.
பூமிக்கடியில் உள்ள மூன்று தளங்களில் 1,500 கார்களை நிறுத்த "பார்க்கிங்' வசதி உள்ளது. முதல் தளத்தில் உணவுக் கூடம் மற்றும் கடைகள் அமைக்கப்படும் இடம் போக, மீதமுள்ள இடமும், பிற தளங்களும் ஐ.டி., நிறுவனங்களுக்கு வாடகைக்குத் தரப்படும். ஐ.டி., படித்த 12 ஆயிரம் பேருக்கு இங்கு வேலை கிடைக்கும். அவிநாசி ரோட்டில் உள்ள நுழைவாயில் மட்டுமே, இதற்கு பிரதான வாயிலாக இருக்கும். ஹோப் காலேஜ் அருகே, சாலையைக் கடந்து, பூங்காவுக்கு வருவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க, இந்த இடத்தில் பல அடுக்கு மேம்பாலம் அமைக்க, உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று எந்த ஐ.டி., நிறுவனத்தையும் கட்டாயப்படுத்த முடியாது. அவரவர் தேவைக் கேற்ற திறனாளிகளை அவர்கள் தேர்வு செய்து கொள்வர். இருப்பினும், கோவையில் இருப்பவர்களுக்கே பணியில் முன்னுரிமை வழங்கவே, ஐ.டி., நிறுவனங்களும் முன் வர வாய்ப்புண்டு. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.ஆய்வின் போது, கோவை கலெக்டர் உமாநாத், "டைடல் பார்க்' செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் உட்பட பலர் உடனிருந்தனர்.
ஆச்சரியப்படுத்திய அமைச்சர்: அமைச்சர் பழனிச்சாமி பங்கேற்கும் நிகழ்ச்சி என்றாலே, அவர் தாமதமாகத்தான் வருவார் என்று நிருபர்களே தாமதமாகத்தான் செல்வார்கள். ஆனால், சமீபகாலமாக அவரிடம் பெரிய மாற்றம். நேற்று அவர் "டைடல் பார்க்' ஆய்வு நடத்த 11.00 மணிக்கு வருவதாகச் சொல்ல, நிருபர்கள் 12.00 மணிக்கு வந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கு அமைச்சர் வந்து விட, அவரை வரவேற்க யாருமே இல்லை. தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் அவரது காரையும் உள்ளே விட அனுமதி மறுக்க, பாதுகாப்பு அலுவலர்கள் இறங்கி, விஷயத்தை விளக்கினர். அதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், கலெக்டர் மற்றும் பொறியாளர்கள் வரும் வரை, தனியாக தனது உதவியாளரை அழைத்துக் கொண்டு, ஆய்வு செய்தார் அமைச்சர்.
No comments:
Post a Comment