கோவையில் குறுந்தொழிற்பேட்டை அமைக்க, மயிலேறிபாளையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிலம் போதுமானதாக இல்லை; கோவையில் உள்ள அனைத்து தொழில்முனைவோருக்கும் தொழிற்கூடம் கிடைக்கும் வகையில், அரசு உடனடியாக கோவையில் அடுக்குமாடி தொழிற்கூடம் அமைக்க வேண்டும்' என, டாக்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) வெளியிட்ட அறிக்கை:தென்மாநிலத்தின் தொழில் நகராக திகழ்ந்து வரும் கோவையில் தேனீக்கள் போல் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதுபோல், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குறுந்தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பிரச்னைகளுக்கிடையே பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. இருப்பினும், குறுந்தொழில்கூடங்களுக்கு அரசு அறிவிக்கும் சலுகைகள் முறையாக கிடைப்பதில்லை; எட்டிப்பிடிக்க முடியாத தூரத்தில்தான் உள்ளது.
பெரும் பகுதி தொழில் முனைவோர் ஆரம்ப கல்வி மட்டுமே படித்திருப்பதால், போதிய ஆங்கில அறிவு இல்லை; வங்கிகள் மற்றும் அரசு அறிவிக்கும் சலுகைகள் குறித்த அறிவிப்புகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், வங்கிகளுக்கு கடன் கேட்டு சென்றாலும், அரசின் சலுகைகளை கேட்டு சென்றாலும் பல்வேறு நெருக்கடிகளை குறுந்தொழில் முனைவோர் சந்திக்கின்றனர்.வங்கி கடன் பெற வசதியாக குறுந்தொழில் முனைவோர்களை உள்ளடக்கிய ஒரு குழுவை ஏற்படுத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். 50 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு அமைக்கப்படும் தொழிற்பேட்டையில் ரோடு, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பணிகள் மேற்கொள்ள அரசு மானியம் அளிக்கிறது. கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள் ஒன்றாக இணைந்து 50 ஏக்கர் வரை நிலங்களை வாங்க முடியாததால், அரசின் சலுகைகளை பெருவதில் சிக்கல் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 12 பேர் முதல் 120 பேர் ஒன்றிணைந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்கி சிறு குறுந்தொழிற்பேட்டை அமைத்தாலும், 10 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைத்தாலும் அனைத்து சலுகைகளையும் காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் குறுந்தொழிற்பேட்டை அமைக்க அரசு மயிலேறிபாளையத்தில் 22 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது; இதுபோதுமானதாக இல்லை. கோவையில் உள்ள அனைத்து தொழில்முனைவோருக்கும் தொழிற்கூடம் கிடைக்கும் வகையில், அரசு உடனடியாக கோவையில் அடுக்குமாடி தொழிற்கூடம் அமைக்க வேண்டும்.-Dinamalar
No comments:
Post a Comment